

சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் சீரியல் படப்பிடிப்பில் நடிப்பதற்காக தங்கியிருந்தார்.
இவருக்கும் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால், ஓட்டல் அறையில் ஒரேஅறையில் இருவரும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சித்ரா சீரியல் படப்பிடிப்பை முடித்துகொண்டு அதிகாலை 2 மணியளவில் ஓட்டல் அறைக்கு வந்துள்ளார். அப்போது, ஹேம்நாத்தை வெளியே அனுப்பிவிட்டு, குளிக்கச் செல்வதாகக் கூறி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக, நாசரேத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சித்ரா படப்பிடிப்பில் இருந்தபோது, ஹேம்நாத்குடித்துவிட்டு அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சித்ராவின் தாயாரும் ஹேம்நாத்தை விட்டுப் பிரிந்து வரும்படி அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் 4-வது நாளாக போலீஸார் நேற்றும் விசாரணை நடத்தினர்.
அத்துடன், ஓட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகள், சித்ராவின் செல்போன் ஆகியவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சித்ராவின் தந்தை ரவிச்சந்திரனிடமும், சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்த 5 பேரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.