தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட 6 மாவட்டங்களில் 101 நாட்களில் 12.01 லட்சம் சதுர அடியில் குறுங்காடுகள்: 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு ரோட்டரி சங்கங்கள் சாதனை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட 6 மாவட்டங்களில் 101 நாட்களில் ஏறத்தாழ 12.01 லட்சம் சதுர அடி பரப்பளவில் குறுங்காடுகளை ரோட்டரி சங்கங்கள் ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளன.

ரோட்டரி மாவட்டம் 2981-ன் கீழ் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இயற்கை பேரிடர்களால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து விட்ட நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், காடுகளின் பரப்பை அதிகரித்து மழை பெய்யும் சூழலை அதிகரிக்கும் நோக்கிலும் குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.40 லட்சம், திருவாரூர் மாவட்டத்தில் 2.47 லட்சம், நாகை மாவட்டத்தில் 3.29 லட்சம், கடலூர் மாவட்டத்தில் 2.14 லட்சம், புதுச்சேரியில் 30 ஆயிரம், காரைக்கால் மாவட்டத்தில் 41 ஆயிரம் என மொத்தம் 12.01 லட்சம் சதுர அடியில் ஏறத்தாழ 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரோட்டரி 2981 மாவட்ட ஆளுநர் ஆர்.பாலாஜி பாபு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: ரோட்டரி சங்கம் சார்பில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து 6 மாவட்டங்களில் இந்த பணிகளை ஜூலை 1-ம் தேதி தொடங்கினோம். அரசு இடங்கள், கோயில், கல்வி நிறுவனங்களின் இடங்களைத் தேர்வு செய்து, தொடர்புடைய நிறுவனங்களிடம் 33 ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, வேலி அமைத்து, 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணியையும் ஏற்றுள்ளோம்.

மரக்கன்றுகள் நடும்போது 3 அடிக்கு குழி தோண்டி, அதில் இயற்கை உரம் நிரப்பப்படுகிறது. வேம்பு, பலா, கொய்யா உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளே அதிக அளவில் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளுக்கு தண்ணீர் வழங்க சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

ரோட்டரி மாவட்டம் 2981-ன் கீழுள்ள 57 சங்கங்கள் 101 நாட்களில் ஏறத்தாழ 12.01 லட்சம் சதுர அடியில் குறுங்காடுகள் அமைத்துள்ளன. இந்தியாவில் பொது இடங்களில் அதிக அளவிலான பரப்பளவில் வேறு எங்கும் இதுபோன்ற குறுங்காடுகள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

இந்தக் காடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, புவி வெப்பமாவதைத் தடுத்து, பறவைகள், சிறு விலங்குகளுக்கு உறைவிடமாகவும், உணவு வழங்கும் இடமாகவும் இருக்கும்.

இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இந்தப் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in