

போராடும் விவசாயிகளை தேசத் துரோகிகள், காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றெல்லாம் கூறி அவமானப்படுத்திய மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சிரோன்மணி அகாலி தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.
அமிர்தசரஸில் செய்தியாளர்களை சந்தித்த பாதல், "மத்திய அரசு ஏன் விவசாயிகளுக்கு எதிராக கொடுங்கோலுடன் செயல்படுகிறது? யாருடைய நலனுக்காக எனக் கூறி வேளாண் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அந்தச் சட்டத்தில் உடன்பாடு இல்லை. அப்படிவுள்ளபோது ஏன் அவற்றைத் திரும்பப்பெறக் கூடாது.
அதுமட்டுமல்லாமல், போராடும் விவசாயிகளைத் தேத் துரோகிகள், காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றெல்லாம் கூறி மத்திய அமைச்சர்கள் சிலர் அவமானப்படுத்துகின்றனர்.
இதற்காக அவர்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். வேளாண் போராட்டத்தைக் கையாள்வதில் மத்திய அரசின் போக்கு கண்டனத்துக்குரியது.
விவசாயிகளின் குரலை மத்திய அரசு நெறிக்க நினைப்பது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் மோடி விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டுகிறேன்.
கொடுங்குளிரில் தெருக்களில் விவசாயிகள் தவிக்கின்றனர். அவர்கள் அதை விரும்பிச் செய்யவில்லை. வேறுவழியின்றி செய்கின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை தேசத் துரோகி என அவமானப்படுத்துவதை மத்திய அரசு கொள்கையாகவே கொண்டுள்ளது.