லோக் அதலாத் மூலம் தூத்துக்குடியில் ஒரே நாளில் 143 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு: ரூ.2.79 கோடி தொகை பைசல்

தூத்துக்குடியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் சமரச தீர்வு காணப்பட்ட உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சி.குமார் சரவணன், வழக்காடியிடம் வழங்கினார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் சமரச தீர்வு காணப்பட்ட உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சி.குமார் சரவணன், வழக்காடியிடம் வழங்கினார்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 12 அமர்வுகளில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 143 வழக்குகளில் ரூ.2.79 கோடி அளவுக்கு சமரச தீர்வு காணப்பட்டன.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சி.குமார் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடியில் 5 அமர்வுகள், கோவில்பட்டியில் 2 அமர்வுகள், திருச்செந்தூரில் 2 அமர்வுகள், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் தலா ஒரு அமர்வு என மாவட்டத்தில் மொத்தம் 12 அமர்வுகளில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.ஹேமா, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி எஸ்.உமா மகேஸ்வரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே..பாஸ்கர், கூடுதல் மாவட்ட உரிமையியல் ஜே.ஆப்ரீன் பேகம், 2-வது நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி ஆர்.எச்.உமாதேவி, 3-வது நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி கே.சக்திவேல், 4-வது நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி ராஜ குமரேசன் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் கலந்து கொண்டனர்

இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட 997 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் ரூ..8.10 லட்சம் மதிப்புள்ள 4 வழக்குகளும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் ரூ.2,70,50,894 மதிப்புள்ள 139 வழக்குகளும் என மொத்தம் ரூ.2,78,60,894 மதிப்புள்ள 143 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரான சார்பு நீதிபதி ஆர்.சாமுவேல் பெஞ்சமின் செய்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in