

கோவை அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு வந்தபோது, போலீஸாரைத் தள்ளிவிட்டு, விசாரணைக் கைதி தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு (24). இவர், ரத்தினபுரி அருகேயுள்ள தயிர் இட்டேரியில் சாலையோரம் தங்கி, கிடைக்கும் வேலையைச் செய்து வந்தார். மேலும், பிக்பாக்கெட், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களிலும் அவர் அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக, ரத்தினபுரி போலீஸார், பிரபுவைக் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, அவிநாசியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அவரை அடைத்துள்ளனர்.
பின்னர், நேற்று (டிச.11) தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகளிடம் பிரபு தெரிவித்துள்ளார். அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்படி, சிறைத்துறை நிர்வாகத்தினர் ரத்தினபுரி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் ரேவதி தலைமையிலான குழுவினர், அவிநாசி கிளைச் சிறைக்குச் சென்று இன்று (டிச.12) காலை பிரபுவை சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, பரிசோதனைப் பிரிவு அருகே பிரபுவின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அங்கிருந்த ஊழியர்கள் சேகரித்து எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பிரபு, தனது பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் ரேவதி மற்றும் போலீஸாரைத் தள்ளிவிட்டு, அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். போலீஸார் மற்றும் பொதுமக்கள் அவரைப் பிடிக்கத் துரத்தினர். அதற்குள் பிரபு தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக, ரத்தினபுரி போலீஸ் உதவி ஆய்வாளர் ரேவதி அளித்த தகவலின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தப்பிய பிரபுவைப் பிடிக்க ரேஸ்கோர்ஸ் போலீஸார் தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தொடரும் சம்பவங்கள்
கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சை, பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர். இங்கு கைதிகளுக்கு எனப் பிரத்யேக வார்டும் உள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் சமீபத்திய மாதங்களில் மட்டும் 4-வது முறையாக நடந்துள்ளது. இதற்கு முன்னரே கொலைக் குற்றவாளி உள்ளிட்ட சிலர் தப்பிச் சென்று, பின்னர் பிடிபட்டுள்ளனர்.
கைதிகளை அழைத்து வரும் போலீஸார், பாதுகாப்புப் பணியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸ் உயரதிகாரிகள் முன்னரே அறிவுறுத்தியுள்ளனர். இச்சூழலில் தற்போது மீண்டும் ஒரு கைதி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, கைதிகளின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸாரைப் பணியில் அமர்த்த வேண்டும் என சமூகச் செயற்பாட்டாளர்கள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.