Published : 12 Dec 2020 05:27 PM
Last Updated : 12 Dec 2020 05:27 PM

ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டம்: வேலூர், ஆற்காட்டில் இலவசப் பேருந்து சேவையுடன் ஆட்டோக்கள் இயக்கம்

வேலூரில் இலவச ஆட்டோ சேவையை வழங்கிய ரஜினி ரசிகர் ராஜேஷ்.

வேலூர்/ஆற்காடு

வேலூர், ஆற்காட்டில் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு இலவசப் பேருந்து சேவை வசதியுடன் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.

வேலூர், ஆற்காட்டில் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (டிச.12) அவரது ரசிகர்கள் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இலவசப் பேருந்து சேவையுடன் ஆட்டோ சேவையைத் தொடங்கினர். வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற மாவீரன். இவர் அதே பகுதியில் உள்ள 'படையப்பா' ரஜினி மக்கள் மன்றச் செயலாளராக உள்ளார். ஆட்டோ ஓட்டுநரான இவர், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

ரஜினியின் பிறந்த நாளான இன்று ராஜேஷ், தனது ஆட்டோவில் பயணிக்கும் அனைவருக்கும் இலவச சேவை என்று போஸ்டரை ஒட்டியிருந்தார். மேலும், 'ஆட்சி மாற்றம் இப்போது இல்லன்னா, எப்போதும் இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோவில் அனைவருக்கும் இலவசம்' என்றும் அந்த போஸ்டரில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து, ராஜேஷ் கூறும்போது, "சிறு வயதில் இருந்தே ரஜினி ரசிகனாக இருக்கிறேன். அவரது அனைத்து படங்களையும் திருவிழா போலக் கொண்டாடுவோம். எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு ரஜினி என்றும், இரண்டாவது மகனுக்கு படையப்பா என்றும், மகளுக்கு ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவின் பெயரையும் வைத்துள்ளேன்" என்றார்.

ஆற்காட்டில் இருந்து கலவை வரை பொதுமக்களுக்கு இலவச சேவையாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ரஜினியின் 71-வது பிறந்த நாளையொட்டி ஆற்காடு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

பொதுமக்களுக்காக ஆற்காட்டில் இருந்து கலவை வரை செல்லும் தனியார் பேருந்தில் 5 முறை இயக்கத்தின்போது இலவசமாகச் சென்று வரவும், அதற்கான கட்டணத்தை ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஏற்றுக்கொண்டனர். மேலும், ஆற்காட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடிய இரண்டு ஆட்டோக்களில் இலவச சேவையையும் தொடங்கி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x