

கடலூரில் கிழிக்கப்பட்ட பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சாக்கடையில் கிடந்தன. காவல் துறையினர் அவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள ராமதாஸ் நாயுடு தெரு, மசூதி தெரு, நபிகள் நாயகம் தெரு ஆகிய மூன்று தெருக்களில் உள்ள சாக்கடையில் இன்று (டிச. 12) காலை பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிழிக்கப்பட்டும், கிழிக்கப்படாமலும் கிடந்தன.
அந்தத் தெருக்கள் வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான காவல் துறையினர், சாக்கடைகளில் கிடந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். அதில், மொத்தமாக ரூ.12 ஆயிரம் இருந்துள்ளது. மேலும், காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் பதுக்கி வைத்திருந்தவர்கள் வெளியே தெரியாமல் இருக்க இது போல ரூபாய் நோட்டை கிழித்து சாக்கடையில் போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.