

ஒட்டன்சத்திரம் மலையடிவார விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்ததால் தென்னை மரங்கள் சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி, புதுக்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் விவசாயிகள் தென்னை மரம் சாகுபடி செய்துள்ளனர்.
நேற்றிரவு மலைப்பகுதியில் இருந்து வந்த யானைக் கூட்டம் விவசாயி குணசேகரனுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் புகுந்து பத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
மேலும், சோலார் வேலியை சேதப்படுத்தி அங்கு பயிரிட்டு இருந்த மக்காச்சோளப் பயிர்களையும் சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த விருப்பாட்சி வனத்துறையினர் சேதமடைந்தப் பகுதியை பார்வையிட்டனர்.
மேலும் அப்பகுதியில் குடியிருந்து வரும் தோட்ட பணியாளர்கள் இரவு நேரங்களில் யானைகள் கூட்டமாக வருவதால் இங்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு குடியிருக்க முடியாமல் மிகவும் அச்சத்துடன் வசிக்கின்றனர்.
வனத்துறையினர் உடனடியாக மின் வேலி அமைத்து யானைக் கூட்டங்கள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும் என்றும் யானைக் கூட்டங்களை இப்பகுதியிலிருந்து வேறு மலைப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.