ஆ.ராசா மீது திடீர் வழக்குப்பதிவு: முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக புகார்

ஆ.ராசா மீது திடீர் வழக்குப்பதிவு: முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக புகார்
Updated on
1 min read

திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திடீரென வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக மீதான வழக்குகள் குறித்து பதில் அளிக்கும்போது முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக புகார்.

திமுக, அதிமுக இரண்டுக்கட்சிகளும் அரசியல் நிலைப்பாட்டில் விமர்சிப்பது வழக்கம். சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் பழனிசாமி 2 வழக்கில் திமுகவின் சம்பந்தம் குறித்தும், சர்க்காரியா கமிஷன் விசாரணை குறித்தும் சுட்டிக் காட்டியிருந்தார்..

இதற்கு பதிலளித்த ஆ.ராசா, "மறைந்த உங்கள் தலைவி மீது தான் வழக்கு தொடரப்பட்டு சிறைக்கும் சென்றார், உங்கள் கட்சியில் தான் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்கள் உள்ளனர், உச்ச நீதிமன்றம் உங்கள் தலைவியைp பற்றி குறிப்பிட்டுள்ளது, ஆனால் 2 ஜி வழக்கில் நானே வாதாடி குற்றமற்றவன் என வெளியில் வந்தேன், வேண்டுமானால் தலைமைச் செயலகம் வருகிறேன், முதல்வர் என்னுடன் வழக்குகள் பற்றி விவாதிக்க தயாரா?" என்று சவால்விட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "ஆ.ராசா எல்லாம் பெரிய ஆள் இல்லை? அவருடன் நாங்கள் ஏன் விவாதிக்க வேண்டும்" என்று காட்டமாகப் பதிலளித்தார்.

இதற்கிடையில், இந்த சர்ச்சை பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பேசுவது முறையா? என்று" வினவினார்.

ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைவர்களிடம் அனுமதி பெற்று வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் செல்வக்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் ஆ.ராசா மீது 153 (வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது), 505 (1)(பி)(அரசுக்கு எதிராக பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் தூண்ட்டக்கூடிய பேச்சு, செயல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in