அரசின் தவறான கொள்கைதான் பருப்பு விலை உயர்வுக்கு காரணம்: தமிழக விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

அரசின் தவறான கொள்கைதான் பருப்பு விலை உயர்வுக்கு காரணம்: தமிழக விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகள்தான் பருப்பு மற்றும் எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் துவரம் பருப்பு விலை ரூ.210, உளுந்தம் பருப்பு விலை ரூ.190 என அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக, உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை 10 சதவீதத்துக்கு அதிகரித்துள்ளது.

வடிகால் பாசன வசதி கொண்ட நமது நாட்டில் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன், வெளிநாட்டுக்கே அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகள் காரணமாக பருப்பு, எண்ணெய் உற்பத்தி குறைந்ததோடு, தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பருப்பு, எண்ணெய் உற்பத்திப் பணிகள் மென்மையானவை. பொறுமையுடன் நுட்பமாக செய்ய வேண்டும். தொழில்நுட்ப உபகரணங்களை அதிகம் பயன்படுத்த முடியாது. இதற்கு பெண் விவசாயத் தொழிலாளர்கள்தான் தேவை.

ஆனால், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் காரணமாக இந்த வேலைகளுக்கு பெண் தொழிலாளர்கள் கிடைப்பது இல்லை. இதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணம். அடுத்தபடியாக வனவிலங்குகளால் ஏற்படும் சேதம்.

ஆன்லைன் வர்த்தகம் காரணமாக உணவுப் பொருட்கள் பதுக்கலும் அதிகரித்துள்ளது. இவற்றுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யும்பட்சத்தில், அரசே நேரிடையாக இறக்குமதி செய்ய வேண்டும். அதைவிடுத்து தனியாரும் இறக்குமதி செய்யலாம் என அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் விலை உயர்வு குறையாது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in