Published : 12 Dec 2020 01:19 PM
Last Updated : 12 Dec 2020 01:19 PM

பிரசாத் ஸ்டுடியோ அதிபர்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு: ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்பு

பிரசாத் ஸ்டுடியோவை விட்டு தன்னை வெளியேற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி ஸ்டுடியோ அதிபர்கள் மீது இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கும்படி ஸ்டுடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஸ்டுடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது என்றும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டுடியோவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவுக்கு டிசம்பர் 17-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x