

கோவை கந்தேகவுண்டன் சாவடி (க.க.சாவடி) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் தொகையைப் பறிமுதல் செய்தனர்.
கோவை பாலக்காடு சாலையில், மதுக்கரை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட கந்தேகவுண்டன் பகுதியில் வட்டாரப் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான சோதனைச்சாவடி உள்ளது. கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் இன்று (டிச.12) அதிகாலை 4 மணிக்கு கந்தேகவுண்டன் சாவடி (க.க.சாவடி) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு பணியில் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, உதவியாளர் அருண்குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். அலுவலகத்தில் கணக்கில் வராத தொகை ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் தொகையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்தத் தொகைக்கு அங்கு இருந்த அலுவலர்களால் உரிய தொகை கணக்குக் காட்ட முடியவில்லை. இது வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சமாகப் பெற்ற தொகை எனத் தெரிந்தது. இந்தத் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இந்த சோதனை காலை 10 மணிக்கு நிறைவடைந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இதே சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்திய போதும், இதே மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா போலீஸாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.