

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்குத் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்துவிட்ட நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக அன்னதானம், மருத்துவ முகாம்கள் எனப் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள்.
பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பதிவில் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ரஜினிக்குத் தொலைபேசி வாயிலாகப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
”அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 71-வது பிறந்த நாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.