

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்திக் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு வாழ்த்து கூற நேற்று இரவு முதலே ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர்.
போயஸ் கார்டனில் நள்ளிரவில் ரசிகர்கள் சிலர் கேக் வெட்டி பிறந்த நாளையும் கொண்டாடியுள்ளனர். இது தவிர சமூக வலைதளங்களிலும் ரஜினிக்குப் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்று அறிவித்தபின் அவர் மீது கூடுதல் கவனமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், “அன்புள்ள ரஜினிகாந்த், உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். நீண்டகாலத்துக்கு ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெற்று வாழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நடிகர் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், “தனது அயராது உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ எனது இதயமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கும் இன்று பிறந்த நாள் ஆகும். அவருக்கும் பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ சரத் பவாரின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்க ஆசிர்வதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இருந்தாலும், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.