

2ஜி வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுடன் நேரில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் குற்றச்சாட்டுக்கு, வழக்கறிஞர் ஜோதி சரியான பதில் கூறியுள்ளார். லண்டன் வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவை ஜெயலலிதா மீது திமுகவினரால் வேண்டுமென்றே போடப்பட்டது. இதில், டிடிவி தினகரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
லண்டன் வழக்குக்காக திமுக பல கோடி ரூபாயை செலவு செய்தது. அந்த வழக்கை எதிர்கொள்ள ஜெயலலிதா தயாராகவே இருந்தார். ஆனால், விசாரணை முடிந்த நிலையில், இவ்வழக்கை திமுகவினர் வாபஸ் பெற்றது ஏன்? இதன் மூலம் டிடிவி தினகரன் அவ்வழக்கில் இருந்து தப்பியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பு வந்த பிறகுதான் ஜெயலலிதா உயிர் இழந்தார். சொத்துக் குவிப்புவழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல, அந்த வழக்கில் சரியாக வாதாடாத சில வழக்கறிஞர்கள்தான் முக்கியக் காரணம்.
ஜெயலலிதா குறித்து ஆ.ராசா அவதூறாகப் பேசுகிறார். 2ஜி வழக்கில் தான் குற்றவாளி இல்லைஎன்று ஆ.ராசா கூறுகிறார். ஆனால், இவ்வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய ஆ.ராசா முயன்றுள்ளார். ஆனால், அவரது கருத்தை நீதிபதி ஏற்கவில்லை. இந்த வழக்கில் ஆ.ராசா சிறைக்குச் செல்வது உறுதி.
சாதிக் பாட்ஷா மரணம்
ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்ஷாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி, அவரது மனைவி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளார். 2ஜி வழக்கு தொடர்பாக தன்னுடன் விவாதத்துக்கு வரத் தயாரா என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இத்தனை கோடி பணம் ஆ.ராசாவுக்கு கிடைத்தது எப்படி?
ஆ.ராசா முதலில் தரக்குறைவாகப் பேசியதால்தான், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால், டிடிவி தினகரனை நம்பிச் செல்லமாட்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சியமைப்பது உறுதி. இவ்வாறு புகழேந்தி கூறினார்.