

திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட உத்தமசோழ புரம், நரிமணம், குத்தாலம், கோபுராஜபுரம், வடகரை, கோட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் 1,000-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தொகுப்பு வீடுகளின் மேற் கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும், வீடுகளை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ‘கஜா' புயலின்போது, இந்த தொகுப்பு வீடுகள் மேலும் சேதமடைந்தன.
இந்நிலையில், ‘புரெவி' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில், தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் தண்ணீர் கசிந்து, சிமென்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. இதனால், இந்த வீடுகளில் குழந்தைகளுடன் வசிப்பவர்கள் வீடு எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு, சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசாரித்தபோது, “திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பப் பட்டுள் ளது. இதற்கான நிதி வந்ததும் உடனடியாக பணி தொடங்கி முடிக்கப்படும்” என்றனர்.