

திருவாரூர் அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரது அறை, வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.62.72 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளராக பணியாற்றி வருபவர் தன்ராஜ் (56). இவர், திருவாரூரில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் துரைசாமியிடம், ஆலையின் உரிமத்தை புதுப்பித்து சான்று அளிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் யோசனைப்படி, நேற்று முன்தினம் தன்ராஜிடம் துரைசாமி ரூ.40 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்திருக்கிறார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நந்தகோபால், ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீஸார் தன்ராஜை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, நாகை நாகூரில் அவர் தங்கியிருந்த அறையிலும், சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் ஏடிஎஸ்பி சீனுவாச பெருமாள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது ரூ.62.72 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். இதில், ரூ.2.66 லட்சம் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.
பின்னர், அவரை திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று போலீஸார் ஆஜர்படுத்தி, பணத்தையும் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்பு போலீஸார், கைப்பற்றப்பட்ட பணத்துக்கு முறையான கணக்கு கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.