

மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும்வரை போராட்டம் தொடரும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
''சுங்கச்சாவடிகளில் வசூல் கொடிகட்டிப் பறந்துவருகிறது. சென்னை, துரைப்பாக்கம், பெருங்குடி, அக்கரை, போரூர் போன்ற இடங்களில் சுங்கச்சாவடிகள் மூலம் மக்களிடம் சுரண்டுகின்ற செயல் நடைபெற்று வருகிறது'' எனக் குற்றம் சாட்டியும், விதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் அக்கரை சுங்கச்சாவடி அருகே இன்று (டிச. 11) காலை, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
"சட்ட விதிகளை மீறி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை அகற்ற வலியுறுத்தி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் இந்த ஆட்சி மீதான மக்களின் கோபத்தைக் காட்டுகிறது.
மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும்வரை போராட்டம் தொடரும்!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.