ஆயுர்வேத மருத்துவத்தை எதிர்க்கவில்லை அறுவைச் சிகிச்சையைத் தான் எதிர்க்கிறோம்: இந்திய மருத்துவச் சங்க தலைவர் தகவல் 

ராமநாதபுரத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள்.
ராமநாதபுரத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள்.
Updated on
1 min read

ஆயுர்வேத மருத்துவத்தை எதிர்க்கவில்லை, ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்பதையே எதிர்க்கிறோம் என ஐஎம்ஏ சங்க ராமநாதபுரம் கிளை தலைவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் அரசிதழில் கடந்த நவம்பரில் அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவைச் சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு இந்திய மருத்துவ சங்கம்(ஐஎம்ஏ) எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 150 மருத்துவமனைகள், 500 சிகிச்சை மையங்கள் காலை 6 முதல் மாலை 6 மணி முதல் கரோனா மற்றும் அவரச சிகிச்சைகளை தவிர்த்து மற்ற சிகிச்சைகள் அளிக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதற்கு ஆதரவு தெரிவித்து அரசு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் ராமநாதபுரம் கிளை சார்பில் மருத்துவர்களின் ஆலோசனைக் கூட்டம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் தலைவர் டி.அரவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டி.ஆனந்த சொக்கலிங்கம், நிதி செயலாளர் அக்னெலா தெரசா ஜோஸ்பின் முன்னிலை வகித்தனர்.

மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னத்துரை அப்துல்லா, திருமலைவேலு, ரவி ராஜேந்திரன், மூத்த துணைத் தலைவர் ஜி.சுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலிலுர் ரகுமான் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் சங்கத்தின் தலைவர் டி.அரவிந்த ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆயுர்வேத மருத்துவர்கள் 6 மாத பயிற்சி பெற்றுவிட்டு அலோபதி மருத்துவர்கள் செய்யும் அறுவைச் சிகிச்சைகளை செய்யலாம் என்ற அரசின் அறிவிப்பு பொதுமக்களை மிகவும் பாதிக்கும். பாரம்பரிய மருத்துவத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.

அலோதியுடன் ஆயுர்வேதம் கலப்பதையும், ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்பதை எதிர்க்கிறோம். தகுந்த ஆராய்ச்சி, பயிற்சி மூலம் ஆயுர்வேத மருத்துவத்தை அலோபதி மருத்துவத்திற்கு இணையாக உயர்த்த வேண்டும்.

வட மாநிலங்களில் அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதற்காக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பு சரியானதல்ல.

அதற்குப் பதிலாக கூடுதலாக மருத்துவக் கல்லூரிகளை துவங்கி, அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in