தென்காசியில் ரூ.119 கோடி மதிப்பில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக கட்டிடம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தென்காசியில் ரூ.119 கோடி மதிப்பில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக கட்டிடம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்
Updated on
2 min read

தென்காசியில் ரூ.119 கோடி மதிப்பில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கட்டிடப் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், புதிய மாவட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு கழித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 11.11 ஏக்கர் நிலம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்காக தேர்வு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, தமிழக தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் சமீரன், எம்எல்ஏக்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், எஸ்பி சுகுணாசிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, “தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கனவை நிறைவேற்றி, தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வர் உருவாக்கினார்.

ஆட்சியல் அலுவலக பெருந்திட்ட வளாகம் ரூ.119 கோடி மதிப்பீட்டில் 11.11 ஏக்கர் இடத்தில் 28 ஆயிரம் மேல் சதுரமீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில், 6 மாடியில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்கு அடிக்கல் நாட்டியதற்கு தென்காசி மாவட்ட மக்கள் சார்பில் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

விழாவைத் தொடர்ந்து, பெருந்திட்ட வளாகம் கட்டப்படும் இடத்தில் பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியர், எஸ்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெருந்திட்ட வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 மாடிகளில் அனைத்துத் துறைகளின் மாவட்ட தலைமை அலுவலகங்களும் கட்டப்படுகின்றன. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படும். அதற்கு தனியாக அரசாணை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால், ஆயுதப்படை மைதானம் மற்றும் காவல்துறையின் இதர அலுவலகங்களுக்கு வேறு இடம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் பங்களா, எஸ்பி பங்களா உள்ளிட்ட அதிகாரிகளுக்கான குடியிருப்புகளுக்கும் வேறு இடம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பூங்கோதை எம்எல்ஏ கண்டனம்:

ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் திமுக எம்எல்ஏ பூங்கோதை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்காததால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை கூறும்போது, “தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரப்பேரி அருகே அமைக்க அதிமுக எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தனது சுய லாபத்துக்காக தீவிர முயற்சி எடுத்தார்.

அது சுற்றுச்சூழலுக்கு எதிரானது, போக்குவரத்துக்கு உகந்த இடம் எல்லை என்பன உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, மக்கள் எளிதில் வந்து செல்லும் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என நானும், கடையநல்லூர் தொகுதி திமுக கூட்டணி எம்எல்ஏ முஹம்மது அபூபக்கரும் சுட்டிக்காட்டினோம். ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரப்பேரி அருகே அமைக்காமல் தடுத்ததில் திமுகவுக்கு பெரும் பங்கு உண்டு.
சரியான இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைய திமுக தான் பெரும் முயற்சி எடுத்தது.

ஆனால், ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவுக்கு எங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை. முதல்வர் அலுவலகத்தில் இருந்துதான் எங்களை அழைக்க வேண்டாம் என்று கூறியதாக சொல்கிறார்கள்.

அது உண்மை என்றால் முதல்வரை கடுமையாக கண்டிக்கிறோம். ஆட்சியர் அலுவலகம் மக்கள் பணத்தில்தான் கட்டப்படுகிறது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அடிக்கல் நாட்டு விழா நடத்தியது கண்டனத்துக்குரியது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in