Published : 11 Dec 2020 12:44 PM
Last Updated : 11 Dec 2020 12:44 PM

மீளவிட்டான் - கோவில்பட்டி இடையே அமைக்கப்படும் 2-வது இருப்புப் பாதையில் பிப்ரவரியில் ரயில்கள் இயக்கம்: துரித கதியில் நடைபெறும் பணிகள் 

தூத்துக்குடி மீளவிட்டான் முதல் கோவில்பட்டி வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் 2-வது தண்டவாளப் பாதையில் பிப்ரவரி மாதம் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கேற்ப பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான ரயில்வே வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி ரயில்வேக்கு அதிக வருவாயும் ஈட்டித் தருகிறது. இப்பாதையை இருவழிப்பாதையாக மாற்றும் பணி பலகட்டமாக நடந்து வருகிறது.

மதுரை - தூத்துக்குடி வரை 160 கி.மீ. தூரத்துக்கு இரண்டாவது தண்டவாளம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கின. ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் கீழ் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் இப்பணிகளை செய்து வருகிறது. மதுரையில் இருந்து சாத்தூர் வரை 77 கி.மீ., சாத்தூர் முதல் தூத்துக்குடி வரை 98 கி.மீ. தூரம் 2 பிரிவுகளாக இப்பணிகள் நடந்து வருகின்றன. ரூ.445 கோடியில் சாத்தூர் முதல் தூத்துக்குடி வரை நடைபெறும் இப்பணிகளில் தற்போது கடம்பூர் முதல் தட்டப்பாறை வரை 36 கி.மீ. தூரத்துக்கு பணி நிறைவடைந்து, பாதுகாப்பு ஆணையர் ஒப்புதலுக்கு பின்னர் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கடம்பூர் முதல் கோவில்பட்டி வரை 24 கி.மீ. தூரத்துக்கு 2-வது தண்டவாளப் பாதை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. தினமும் 1.2 கி.மீ. தூரம் வரை இயந்திரம் மூலம் ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கப்படுகின்றன. மின்சார இணைப்புக்காக மின்கம்பங்களும் நடப்பட்டுள்ளன. தட்டப்பாறை முதல் மீளவிட்டான் வரையிலான 6 கி.மீ. தூரம் நடைபெறும் 2-வது தண்டவாளப் பணிகள் டிச.25-ம் தேதிக்குள் முடிவடையும்.

இம்மாத இறுதி முதல் கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் வரையிலான 21 கி.மீ. தூரத்துக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளது. மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரையிலான 14 கி.மீ. தூரத்துக்கும் தரைதளம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இங்கு ஜல்லி கற்கள் குவித்து, ஸ்லீப்பர் கட்டைகள் அமைக்கும் பணி டிசம்பர் இறுதியில் தொடங்கும். இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்து போக்குவரத்து ஆணையரின் ஆய்வுக்கு பின்னர் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

இதுகுறித்து கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவன பொதுமேலாளர் காந்த் மால்யாலா கூறும்போது, ‘‘சாத்தூர் முதல் தூத்துக்குடி வரை 2-வது தண்டவாளம் அமைக்கும் பாதையில் உள்ள 88 பாலங்களில் 78 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. தற்போது மீளவிட்டான் முதல் தட்டப்பாறை வரை மற்றும் கடம்பூர் முதல் கோவில்பட்டி வரை பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து ரயில்வே ஆணையரின் ஒப்புதலுக்கு பின்னர் பிப்ரவரியில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.கோவில்பட்டி- குமாரபுரம் ரயில் நிலையத்துக்கு இடையே 2-வது தண்டவாளம் அமைக்கும் பணியில் ஜல்லிக் கற்கள் மீது இயந்திரம் மூலம் ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x