

கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் சோர்வு ஏற்பட்டதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தன்னைப் பரிசோதித்துக் கொண்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அங்கு நடைபெறும் பல்வேறு திட்டங்களையும் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று (டிச.11) ரெட்டேரி சந்திப்பில் பொதுமக்கள் 500 பேருக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த அழுத்தம், இசிஜி (ECG) பரிசோதனை செய்துகொண்டார்.
சிறிது நேரம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். இதன்பின்னர், ஒருமணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஸ்டாலின் திரும்பியதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.