

குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முக்கிய ஆவணமாகும்
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்புஇறப்பு பதிவுச்சட்டம் வழிவகைசெய்கிறது. பிறப்பு சான்றிதழ், குழந்தையை பள்ளியில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை,ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றி யமையாததாகவும், வயது குறித்த ஆதாரமாகவும் உள்ளது.
குழந்தையின் பிறப்பை, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவுசெய்யப்பட்ட நாளில் இருந்து 12மாதத்துக்குள் குழந்தையின் பெற் றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரை, 15 ஆண்டுகளுக்குள் உரிய காலதாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.
2000, ஜன.1-க்கு முன் பிறந்த..
திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள்படி, கடந்த 2000-ம் ஆண்டு ஜன.1-ம் தேதிக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு கடந்த 2014-ம் ஆண்டு டிச.31-ம் தேதி வரை பெயர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த கால அளவு முடிந்த பின்னரும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிச.31-ம் தேதி வரை குழந்தையின் பெயரை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டது.
கால நீட்டிப்பு கடந்தாண்டு டிசம்பருடன் முடிவடைந்த நிலையில், பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 15 ஆண்டு அவகாசம் முடிந்த அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகால அவகாச நீட்டிப்பு இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஒருமுறை குழந்தையின் பெயரை பதிவு செய்தபின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின்சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்புபதிவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்து பதிவு செய்யலாம்.
பெயர் பதிவு செய்ய கிராம ஊராட்சியாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடமும், பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலர்அல்லது துப்புரவு ஆய்வாளரிடமும், கண்டோன்மென்ட், நகராட்சி,மாநகராட்சிகளில் துப்புரவு ஆய்வாளர், ஆரம்ப சுகாதார நிலையம்,அரசு மருத்துவமனை ஆகியவற்றின் சுகாதார ஆய்வாளரிடமும் விண்ணப்பிக்கலாம்.
தற்போது வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
ஒருமுறை குழந்தையின் பெயரை பதிவு செய்தபின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் உறுதிமொழிப்படிவம் அளித்து பதிவு செய்யலாம்.