

‘‘வரியே இல்லாத தமிழகம், இலவசமருத்துவம், கல்வி’’ என்ற வாக்குறுதியுடன் ‘மை இந்தியா பார்ட்டி’என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தையும், தமிழக மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்நோக்கில் இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அனில்குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனில்குமார் ஓஜா, ‘புல்லாதேவி’ அறக்கட்டளை மூலம் சமூகப் பணியாற்றி வருகிறார். மாற்றத்தின் மூலம் தொழிலில் முன்னேற்றம் கண்ட இவர்,‘மை இந்தியா பார்ட்டி’ (எனது இந்தியா கட்சி) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து கட்சித் தலைவர் அனில்குமார் ஓஜா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முன்னேற்றம் தொடர்பாக மாநிலத்தில் ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகளிடம் பலமுறை கடிதம் மூலம் தொடர்பு கொள்ள முற்பட்டேன். அது நடைபெறவில்லை. அதனால்தான், தமிழகத்தையும், தமிழக மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் நோக்கில் கட்சி தொடங்கி உள்ளேன்.
எங்களது ‘மை இந்தியா பார்ட்டி’ கட்சி வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் வெற்றி பெற்றால், ஓராண்டில் அனைவருக்கும் இலவச குடிநீர், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்து தரப்படும். 6 மாதங்களில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு, குற்றங்கள் இல்லாத முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்.
தமிழகத்தில் தொழில் தொடங்கதமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலை ஒழித்து, வரி இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். அதனால்தான் ‘போதும் போதும், ஏமாந்தது போதும் என்ற முழக்கத்தை முன்னிறுத்தினேன்.
விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். டாஸ்மாக் மதுக் கடைகள்படிப்படியாக மூடப்படும். தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், வீடு வீடாக சென்றும் பிரச்சாரம் செய்வார்கள். இவ்வாறு அனில்குமார் ஓஜா கூறினார்.