Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

புயல் வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம்: மாவட்ட நிர்வாகத்தின் முதல்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது

அடுத்தடுத்து ஏற்பட்ட இரு புயல்களால் கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பயிர் வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் ‘நிவர்’புயலால் பெய்த கனமழை மற்றும் ‘புரெவி’ புயலால் பெய்த பெருமழையால் மாவட்டமே வெள்ளக் காடாக மாறியது. இதில், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, குறிஞ்சிப்பாடி, வடலூர், பண்ருட்டி உட்பட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழகமுதல்வர் பழனிசாமி, திமுகதலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர்.

கடலூர் மாவட்டத்தில் சேதத்தை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, “புயல் பாதிப்பு அறிக்கை கிடைத்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்றுகூறினார். இதைத் தொடர்ந்து மழை வெள்ள பாதிப்பு குறித்து கடலூர் மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வருகிறது.

முதற்கட்ட கணக்கெடுப்பில், 78,546 ஏக்கர் நெற் பயிர்கள், 3,695ஏக்கர் மணிலா பயிர், 11,490 ஏக்கர் சோளம், 7,543 ஏக்கர் உளுந்து, 2,917 ஏக்கர் பருத்தி என மொத்தத்தில் கடலூர் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 191 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

தோட்டக்கலை பயிர்களான வாழை 1,531 ஏக்கர், காய்கறி பயிர்கள் 3,494 ஏக்கர், மலர் வகை பயிர்கள் 652 ஏக்கர், மூலிகை வகை பயிர்கள் 195 ஏக்கர், மற்றும் மா, கொய்யா, பப்பாளி உள்ளிட்ட 5,872 ஏக்கர் தோட்டக் கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகள் சேதம்

இதுவரை கடலூர் மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி சுமார் 1 லட்சத்து 10 ஆயிரத்து 63 பயிர் வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், 136 கூரை வீடுகள் முழுமையாக சேதமடைந்துள் ளன. 3,027 கூரை வீடுகள் பாதி அளவில் சேதமடைந்துள்ளன.

தொடர்ந்து வருவாய்துறை யினரும், வேளாண்மை துறையினரும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகவலை கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x