

மெரினா கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் மாநிலக் கல்லூரி உள்ளது. நூற்றாண்டு பெருமை வாய்ந்த இந்த கல்லூரியில்தான் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் உள்ளிட்ட பல அறிஞர்கள் படித்தனர். ஆனால் இன்று அந்த கல்லூரியின் நிலைமை தலைகீழாக உள்ளது. மாணவர்களுக்குள் கோஷ்டி மோதல், கல்லூரிக்குள் ஆயுதங்களுடன் வருவது என வன்முறை சம்பவங்கள் நிறைந்த இடமாகமாறிவிட்டது.
மாணவர் பேரவை தேர்தல், 'பஸ் ரூட்' விவகாரங்கள் மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக இருந்தன. இதனால் மாணவர் பேரவை தேர்தலை கல்லூரி நிர்வாகம் ரத்து செய்துவிட்டது. ஆனால் பேரவை தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் கல்லூரியின் முன்பு மெரினா கடற்கரை சாலையில் சுமார் 150 மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போலீஸ் தடியடி
சம்பவ இடத்துக்கு 50-க்கும் மேற்பட்ட போலீஸார் விரைந்து வந்தனர். மாணவர்களை கலைந்து போகச்சொல்லி பலமுறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதனால் மெரினா சாலையிலும், கல்லூரிக்குள்ளும் மாணவர்கள் சிதறி ஓடினர். மறியலை முன்னின்று நடத்திய மாணவர்களையும், சாலையில் ஓடிய மாணவர்களையும் போலீஸார் குறிவைத்து விரட்டிச் சென்று அடித்தனர். இதனால் மெரினா கடற்கரை சாலை பரபரப்பானது.
பஸ் கண்ணாடி உடைப்பு
கல்லூரிக்குள் சென்ற மாணவர்கள் அங்கிருந்து போலீஸார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் கீழ்க்கட்டளையில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சென்ற 45இ பஸ்ஸின் கண்ணாடி உடைந்தது. கல்வீச்சில் சில பயணிகளும், பல போலீஸாரும் காயம் அடைந்தனர். மாணவர்களின் போராட்டத்தையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்லூரி முன்பு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த 8 மாணவர்களும், 2 போலீஸாரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
2 பேர் சிக்கினர்
மறியலை நடத்த மாணவர்களை தூண்டிவிட்டதாக எம்.ஏ. 2-ம் ஆண்டு மாணவர் கோபிநாத், எம்.எஸ்ஸி. 2-ம் ஆண்டு மாணவர் ஜெயசிங் ஆகிய இரு மாணவர்களை போலீஸார் பிடித்து சென்றனர். அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் நேற்று மாலை வரை அவர்களிடம் விசாரணை நடந்தது.
தடியடி நடத்திய போலீஸாரை கண்டித்து மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும், போராட்டங்களை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.