

பழவேற்காடு முகத்துவாரத்தில் கல்சுவர் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு மீன்வளத் துறை அனுப்பி வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியை சுற்றி 25 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வசித்து வரும் மீனவர்கள் மீன்பிடி, மீன் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் தூர்வாரினாலும் நன்னீரும் கடல்நீரும் கலக்க முடியாமல் அவ்வப்போது தடை ஏற்படுகிறது. எனவே, மீன்கள் உயிர் வாழ ஏற்ற இடமாக முகத்துவாரத்தை மாற்ற, தூர்வாரி கல்சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து முகத்துவாரத்தில் கல்சுவர் அமைத்து நிரந்தர நிலைப்படுத்த மீன்வளத் துறை முடிவு செய்தது. இதற்கென இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கல்சுவர் அமைய உள்ள பகுதிக்கு 10 கி.மீ சுற்றுவட்டாரத்தில் ஆந்திர எல்லை வருகிறது. எனவே, கல்சுவர் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் தமிழக மீன்வளத் துறை அனுமதி கோரியது. இதைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் துறையின் அறிவுறுத்தலின்படி, பழவேற்காடு முகத்துவாரத்தில் கல்சுவர் அமைப்பது குறித்து மீனவர்களிடம் கடந்த அக்டோபர் மாதம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு மீன்வளத் துறை அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழவேற்காடு முகத்துவாரத்தில் கல் சுவர் அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் திட்டம் தொடர்பாக வரும் திங்கள்கிழமை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே, விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகளை விரைவாக தொடங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.