

உத்திரமேரூர் அருகே சங்கராபுரம் ஏரியின் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறி வந்தது. இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், வரும் நாட்களில் விவசாயத்துக்கு தேவையான நீரின்றி அவதியுறும் நிலை ஏற்படலாம் என்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கிராம மக்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மற்றும் வருவாய் துறையினருடன் பொதுப்பணித் துறையினர் இணைந்து உடைந்த மதகை சீரமைக்கத் தொடங்கினர். இந்நிலையில் உடைப்பு ஏற்பட்ட மதகு பகுதியில் பனை மரங்களை வெட்டிப் போட்டு, அதன் மீது மணல் மூட்டைகள் உள்ளிட்டவற்றை அடுக்கி ஏரியில் இருந்து நீர் வெளியேறுவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து உடைந்த மதகை நிரந்தரமாக சீரமைக்கும் முயற்சியிலும் பொதுப்பணித் துறையினர் ஈடுபடஉள்ளனர்.
பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பொதுமக்களும், வருவாய் துறையினரும் இணைந்து ஏரியில் இருந்துநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தும்முயற்சியில் ஈடுபட்டதற்கு இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுபோல் அரசுத் துறை பணிகளில் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுப்பணித் துறையினர் வலியுறுத்தினர்.