

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் நேற்று வன போஜன உற்சவம் மிக எளிமையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் உள்ள பழமையான வீரராகவ பெருமாள் கோயில், அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இந்த வீரராகவ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வன போஜன உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், நேற்று வீரராகவ பெருமாள் கோயிலில் வன போஜன உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவம், கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில், திருவள்ளூர் டோல்கேட் அருகே உள்ள கோசாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நேற்று கோயில் வளாகத்தில் கரும்பு, தென்னை மற்றும் பல்வேறு செடிகள் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக பார்வேட்டை வனப் பகுதியில் வன போஜன உற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், காலை 8 மணி யளவில் வீரராகவ பெருமாள் பல்லக்கில் தேவி, பூதேவியுடன் ஊர்வலமாக தற்காலிக பார் வேட்டை வனப் பகுதிக்கு சென்றார். தொடர்ந்து, அங்கு பகல் 11.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவ பெருமாள் மற்றும் தேவி, பூதேவி வீற்றிருக்க, வன போஜன உற்சவம்மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இந்த வன போஜன உற்சவத்தில், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.