

கூவத்தை ஒட்டியுள்ள சத்தியவாணி முத்து நகர் பகுதி மக்களை மறு குடியமர்வு செய்வதற்கு மக்கள்நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பிறகு கூவம், அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை மறு குடியமர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்தியவாணி முத்து நகரில் வசிப்பவர்களை மறு குடியமர்வு செய்ய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் போலீஸாருடன் சென்றனர். ஆனால், வீடுகளை காலி செய்ய மறுத்து, கூவம் ஆற்றில் இறங்கி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத்திட்டம்? மனித உரிமைகள் தினத்தைசெயல் அளவில் காண்பது எந்நாள்?’’ என்று தெரிவித்துள்ளார்.