

தமிழகத்தில் 50 வகையான மா ரகங்களை அறிமுகம் செய்யும் வகையில் சேலம் மாவட்டம், கருமந்துறை பழப் பண்ணையில் ரூ.50 லட்சம் மதிப்பில் மரபணு வங்கி அமைக்க புதிய திட்டம் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மாம்பழத்துக்கு சர்வதேச சந்தைகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. வட மாநிலங்களுக்கும், உலக அளவிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
1,037 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள சேலம் - கருமந்துறை பழப் பண்ணை ஆசியாவில் 2-வது பெரிய பழப் பண்ணையாகும். இந்தப் பண்ணையில் மா, சப்போட்டா, மாதுளை, கொய்யா, பலா உள்ளிட்ட பழ வகை நாற்று விடப்பட்டு, அந்த மரக் கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் விளையக்கூடிய மா, கொய்யா உள்ளிட்ட பாரம்பரிய பழ வகைகள் வருங்காலத்தில் அழிந்திடாமல் காத்திட மரபணு வங்கி திட்டத்தை அரசு இங்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 50 வகையான மா ரகங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் கணேசன் கூறியதாவது:
வரும் மார்ச் மாதத்துக்குள் மரபணு வங்கித் திட்டம் செயலாக்கத்துக்கு வந்துவிடும். அரசு ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்களில் இருந்து பாரம்பரியமிக்க தரமான தாய் செடிகளைக் கொண்டு மரபணு வங்கி ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த மரபணு வங்கியில் தரமான பழ மரங்களில் இருந்து இன விருத்திக்காக தாய் செடிகளை உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.