

திருவண்ணாமலையில் வரும் 13-ம் தேதி குபேர கிரிவலம் வர பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்தாலும், மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் குபேர கிரிவலத்துக்கு வரும் 13-ம் தேதி உகந்த நாள் என்ற தகவல் சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது. குரேப லிங்க தரிசனம் மற்றும் கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் திருவண்ணாமலை வர வேண்டாம்.
அன்றைய தினம், குபேர லிங்கத்துக்கு அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மூலம் வழக்கமான பூஜைகள் நடைபெறும். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்''.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.