Published : 10 Dec 2020 09:38 PM
Last Updated : 10 Dec 2020 09:38 PM

விதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி நாளை திமுக ஆர்ப்பாட்டம்: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சுங்கச்சாவடிகளில் வசூல் கொடிகட்டிப் பறந்துவருகிறது. சென்னை, துரைப்பாக்கம், பெருங்குடி, அக்கரை, போரூர் போன்ற இடங்களில் சுங்கச்சாவடிகள் மூலம் மக்களிடம் சுரண்டுகின்ற செயல் நடைபெற்று வருகிறது. விதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி அக்கரை சுங்கச்சாவடி அருகே நாளை (10/12) காலை 10 மணியளவில், திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, சைதாப்பேட்டையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''சென்னையில் நிவர் மற்றும் புரெவி ஆகிய இரண்டு புயல்களால் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை குடிசைப்பகுதி மக்கள் 26 லட்சம் பேருக்கு 8 நாட்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும், இதில் ஒரு நபருக்கு மூன்று வேளை உணவுக்கு ஆகும் செலவு ரூ.150 என்றும், 8 நாட்களுக்கும் உணவுக்கான செலவு ரூ.1200 என்றும், ஆக 8 நாட்களுக்கு 26 லட்சம் பேருக்கு ஆகும் செலவு ரூ.312 கோடி என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 26 லட்சம் பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன. முறையாக அரசு அலுவலர்களை வைத்து வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

10 கிலோ அரிசியை வைத்துச் சமைத்த உணவை 1000 பேருக்கு வழங்கியுள்ளோம் என்று, அதிமுகவின் பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன், விருகம்பாக்கத்தில் விருகை வி.என்.ரவி இன்னும் அதிமுக நிர்வாகிகள் அதிமுக கொடி கட்டிவைத்து, சோழிங்கநல்லூரில் பொதுமக்களுக்கு வழங்கியதாக உணவு வழங்கும் புகைப்படங்களையும் போட்டு முகநூலிலும் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஆணையரிடம், இது மக்கள் பணம், அரசின் பணம் வீணடிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளோம். அதற்கு அவர், ‘நான் குறிப்பு அனுப்பி, நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று பதில் அளித்தார். ஆனால், நேற்று இரவும், காலையிலும் அதேபோல் கட்சி நிர்வாகிகளை வைத்தே இரவு நேரங்களில் உணவுப் பொட்டலங்களை வழங்கிக்கொண்டுதான் உள்ளனர்.

புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. இதன்மூலம் ரூ.312 கோடி மாநகராட்சியின் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அண்மையில் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது மகள் கல்லூரி மாணவி இருவரும் மதுரவாயல் அருகே சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அருகில் மூடாமல், பணிகள் நடைபெறாமல் இருந்த மழைநீர் வடிகால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளனர் என்பதற்கு மதுரவாயல் முதல் வாலாஜா சாலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பிலே, மோசமான சாலையின் நினைவுச் சின்னம் (Monumental Poor Road) என்று நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது.

சுங்கச்சாவடிகளில் வசூல் கொடிகட்டிப் பறந்துவருகிறது. சென்னை, துரைப்பாக்கம், பெருங்குடி, அக்கரை, போரூர் போன்ற இடங்களில் சுங்கச்சாவடிகள் மூலம் மக்களிடம் சுரண்டுகின்ற செயல் நடைபெற்று வருகிறது. விதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி, கடந்த பிப்.10-ம் தேதி தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் மனு அளித்தார்.

அப்போது, அதற்குப் பதில் அளித்த அமைச்சர், தேசிய நெடுஞ்சாலையில் இருந்தால்தான் நாங்கள் சுங்கச்சாவடிகளை அகற்றுவோம். இது மாநகராட்சி சம்பந்தப்பட்டதால் நீங்கள் முதல்வரிடம் புகார் அளியுங்கள் என்று தெரிவித்ததன் காரணமாக, அமைச்சரிடமும் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.

அதேபோன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது (18-02-2020) மத்திய அரசு வகுத்த விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டுவரும் இந்தச் சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷும் நேரடியாக வைத்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், மத்திய சட்ட விதிகளுக்குப் புறம்பாக இயங்கிக் கொண்டு இருக்கக்கூடிய இந்தச் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக முதல்வருக்குக் கடிதம் (15-11-2020) அளித்துள்ளார்.

இவ்வாறு புகார் அளித்து, 10 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்தான், திமுக தலைவர் அறிவுறுத்தலின்படி, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அக்கரை சுங்கச்சாவடி அருகே நாளை காலை 10 மணியளவில், பொதுநலச்சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட திமுகவினர் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டமான அளவில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., கலாநிதி வீராசாமி எம்.பி. ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கடந்த மாதம் தமிழக அரசின் சார்பில் முகக்கவசம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக செய்தியாளர்களைச் சந்தித்தீர்கள். இதுகுறித்து நீதிமன்றத்தை நாட உள்ளீர்களா?

நியாயவிலைக் கடைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட முகக்கவசங்கள் காடாத்துணியால், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தைப்பதற்கான செலவு 1 ரூபாய். ஆனால், அவை ரூ. 5 முதல் 6 ரூபாய்க்கு முறைகேடாகக் கொள்முதல் செய்யப்பட்டு, 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக வழங்கப்படாமல், மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தேன்.

இதேபோன்றுதான் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், தலையணை, உணவுப்பொருட்கள் போன்றவற்றை முறையாக அரசு அலுவலர்களை வைத்து வழங்காமல், அதிமுகவின் பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் போன்ற கட்சி நிர்வாகிகளை வைத்து வழங்கிவிட்டு ரூ.100 கோடி செலவில் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முறையான கணக்குகள் இல்லாமல் அறிக்கை மட்டும் வெளியிடுகின்றனர்.

2ஜி வழக்கை சுட்டிக்காட்டியே, முதல்வர் மீண்டும் மீண்டும் திமுக மீதே குற்றம் சாட்டுகிறாரே?

இதுகுறித்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மிகத் தெளிவான, சட்டபூர்வமான பதிலைப் பல செய்தியாளர்களின் மத்தியில்தான் அளித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கத் திராணியற்ற ஒரு முதல்வர்தான் இதுபோன்று குற்றம் சாட்டுகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா குறித்து, ‘ஒரு கிளைச் செயலாளராகக் கூட தகுதி இல்லாத ஒருவரிடம் நான் பேசுவதாக இல்லை’ என்று முதல்வர் கூறியதாக செய்திகள் வந்துள்ளன.

அதற்கு எங்களுடைய பதில், “ஒரு கட்சியின், (அதிமுக கட்சியாகக் கூட இருக்கட்டும்) அதில், அடிப்படை உறுப்பினர் ஆவதற்குக்கூட தகுதி இல்லாத ஒரு நபர்தான், தற்போது முதல்வராக இருந்து கொண்டிருக்கக்கூடிய போதாத காலம் தமிழ்நாட்டிலே நடந்து கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கடலூரிலே வெள்ளம் எப்படி இவ்வளவு வந்தது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “மழை பெய்து, கடல் பொங்கி, வெள்ளம் உருவானதாக”, ஒரு வியாக்கியான பதிலை முதல்வர் கூறுகிறார் என்றால், இவர் எப்படிப்பட்ட முதல்வர் என்பதை நீங்களே அறியக்கூடும்.

மழைநீர் வெளியாவதற்குத் தேவையான வடிகால்கள் அமைக்காமல் உள்ளதால் மழைநீர் வெளியாகாமல் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் எல்லாம் தண்ணீர் வெளியேற வழியில்லாமல், வெள்ளம்போல் காட்சி அளிக்கிறது என்பதைக்கூட நினைவில் வைத்து பதில் அளிக்க வேண்டாமா? இதுபற்றி ஓர் பொறுப்புள்ள அமைச்சர் கூறுகிறார், “புயல்கள் எல்லாம் முதல்வரைப் பார்த்து பயப்படுகிறதாம்”. எப்படிப்பட்ட முதல்வர், எப்படிப்பட்ட அமைச்சர்கள் உள்ளனர்.

திமுக வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாமே திமுகவின் வாக்கு வங்கியைத்தான் பாதிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 52 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 5 லட்சம் வாக்குகளை இரண்டு தொகுதிகளிலும், 4 லட்சம் வாக்குகளை நான்கு தொகுதிகளிலும், 2 லட்சம் வாக்குகளை திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பெற்றது. ஆனால், வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மிகப் பெரிய அளவில் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்பது உறுதி. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.

குடிசைப் பகுதிகளை விட்டு மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்களே?

இருக்கின்ற பகுதியிலிருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது.

சுங்கச்சாவடிகளை அகற்றுவதால் சாலை பராமரிப்பு பாதிக்கப்படுமே?

40, 50 வருடங்களாக பராமரித்து வந்ததைத்தான், நீதிமன்றமே ‘மோனமென்டல் புவர் ரோடு’ என்று சாடியுள்ளது. அதைத் தனியாரே நிர்வகித்து வந்ததால்தான் மிகவும் மோசமாக உள்ளது.

சென்னையில் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை. தேங்கியதையெல்லம் அகற்றிவிட்டோம் என்று சொல்கிறார்களே?

மடிப்பாக்கம், ஜல்லடியன்பேட்டை, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் கூட இன்னமும் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலைதான் உள்ளது. சென்ற வாரம் கூட வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பார்வையிட வருகிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவை, சிவப்புக் கம்பளத்தின் மீது 4 அடி தூரம் நடந்து சென்று பார்வையிட்டுவிட்டு, நிவாரணங்கள் எதுவும் வழங்காமல் சென்றுவிட்டார்.

மழைக்காலங்களுக்கு முன்பே, மத்திய, மாநில அரசுகளால் சேவைத்துறை அலுவலர்களைக் கொண்டு நடத்தப்படும் கூட்டங்கள் கடந்த 6 முதல் 15 வருடங்களாக நடத்தப்படவே இல்லை. இதனால் மழைக் காலங்களுக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு வழி இல்லாமல் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் அவலநிலையில் உள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புகூட முதல்வர் பெயரளவுக்கு மூன்று நான்கு அரசு அதிகாரிகளை வைத்துக் கூட்டம் நடத்தி செய்தி மட்டும் வெளியிட்டனர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.

எட்டுவழிச் சாலை மிக அற்புதமான திட்டம் என்று அமைச்சர் கூறுகிறாரே?

ஆம். அற்புதமான திட்டம்தான். ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடக்குமே. அற்புதமான திட்டம் மட்டுமல்ல, ஊழல் நடந்தால் அது அவர்களுக்கு அபரிமிதமான திட்டம்தானே.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x