சுடுகாட்டுக்குப் பாதை இல்லை: விருத்தாசலம் அருகே கழுத்தளவு தண்ணீரில் சடலத்தைத் தூக்கிச் சென்ற அவலம்

ஆபத்தான நிலையில் தூக்கிச் செல்லப்படும் சடலம்.
ஆபத்தான நிலையில் தூக்கிச் செல்லப்படும் சடலம்.
Updated on
1 min read

விருத்தாசலம் அருகே சுடுகாட்டுக்குப் பாதை இல்லாததால் சடலத்தைக் கழுத்தளவு தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த வகையில், விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்த கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறு, ஓடை, வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், விருத்தாசலத்தை அடுத்த மேலப்பாளையூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி செல்லம்மாள் (91) உடல்நலக் குறைவால் நேற்று (டிச.9) உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை எரியூட்ட மேலப்பாளையூர் சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றனர்.

அப்போது, சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்துச் சென்றதால் சடலத்தைத் தூக்கிச் செல்வதறியாது திகைத்த உறவினர்கள், ஒருவழியாக ஓடையின் இருபுறமும் கயிறு கட்டி, சடலத்தை வாகனங்களுக்குப் பயன்படுத்தும் டயரினுள் இருக்கும் டியூபில் கட்டி, தூக்கிச் சென்றனர்.

சுடுகாட்டுக்குச் செல்ல பாதையில்லாததால் அவலம்
சுடுகாட்டுக்குச் செல்ல பாதையில்லாததால் அவலம்

சடலத்தைத் தூக்கிச் சென்றவர்களின் கழுத்து அளவுக்குத் தண்ணீர் சென்றதால் மிகவும் ஆபத்தான நிலையிலேயே சடலத்தைத் தூக்கிச் சென்று திரும்பினர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுடுகாட்டுக்கான பாதை பிரச்சினை நிலவிவரும் சூழலில் அதற்கான தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், பருவமழை காலத்தில் உயிரிழப்போரை அடக்கம் செய்வதிலும் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது.

எனவே, கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் நிலவும் சுடுகாட்டுப் பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு காண வேண்டும் என்று உயிரிழந்த செல்லம்மாளின் உறவினர்களும், மேலப்பாளையூர் கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in