Published : 10 Dec 2020 07:11 PM
Last Updated : 10 Dec 2020 07:11 PM

நீட் தேர்வு ஓஎம்ஆர் ஷீட் மதிப்பெண்ணில் குளறுபடி; விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்க: தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதியில் ஒரே வாரத்தில் இருவித மதிப்பெண்கள் காட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவனை கவுன்சிலிங்குக்கு அனுமதிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குளறுபடிக்கான காரணத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.

நீட் தேர்வு நடந்து முடிந்தபின் அக்டோபர் மாதம் 5-ம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓஎம்ஆர் விடைத்தாள்களை வெளியிட்டது. இதில் 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டிய நிலையில், அக்டோபர் 17-ம் தேதி 248 மதிப்பெண்களாகக் குறைத்து ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி வெளியிட்டதாகக் கூறி, கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த மனுவில், 594 என்பதையே தன் நீட் மதிப்பெண் எனக் கணக்கிட்டு, மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

விசாரணையின்போது நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய தேர்வு முகமை சார்பில் மாணவரின் அசல் ஓஎம்ஆர் விடைத்தாள் சம்பந்தப்பட்ட மாணவரிடம் காண்பிக்கப்பட்டது. அசல் விடைத்தாளில் அக்டோபர் 17-ம் தேதி இணையதளத்தில் காட்டியதாகக் கூறப்படும் 248 மதிப்பெண்களையே மாணவர் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

சந்தேகம் தீர்ந்ததாக நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்த நிலையில், சம்மந்தப்பட்ட மாணவர் தன் கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுத்த தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கூடுதல் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அத்துடன் சேர்த்து, அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் எடுத்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்களும் ( 594 மதிப்பெண் எனக் காட்டிய) மாணவர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

மாணவரின் இந்தத் தரவுகள் சந்தேகத்தைக் கிளப்புவதாக தெரிவித்த நீதிபதி, அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை காட்டப்பட்ட 594 மதிப்பெண்கள், திடீரென அக்டோபர் 17-ம் தேதி 248 ஆகக் குறைந்தது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்..

மின்னணு முறையிலான இதுபோன்ற விவகாரங்களில் யாரும் திருத்தம் செய்யவோ, ஊடுருவவோ முடியாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத சூழல் நிலவுவதாகத் தெரிவித்த நீதிபதி, அது சாத்தியம் எனும் பட்சத்தில் இது மிகப்பெரிய ஆபத்து என்றும், உடனடி விசாரணை தேவை என்றும் தெரிவித்தார்.

ஓஎம்ஆர் விடைத்தாளில் திருத்தம் செய்ய முடியும் எனும் பட்சத்தில், இது ஒட்டுமொத்தத் தேர்வு முறையிலும் சிக்கலை ஏற்படுத்தும். இதில் எதிர்கால மருத்துவர்களும், எண்ணற்றவர்களின் வாழ்வும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, ஒரே மாணவருக்கு இரண்டு விடைத்தாள்கள் இணையதளத்தில் எப்படி வெளியிடப்பட்டது, மதிப்பெண் எப்படி வேறுபட்டது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.

தற்போதைய நிலையில், மாணவர் முதலில் பெற்றதாகக் கூறும் 594 மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு அவரை மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கும் பட்சத்தில் அதை இறுதி செய்யக் கூடாதெனவும், அது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்றும் தெரிவித்து விசாரணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x