

புதுச்சேரியில் தொடர் மழையால் 61 ஏரிகள் நிரம்பின. அதிகரிக்கும் நீர்வரத்தால் நீர்நிலைகளில் குளிக்க டிஜிபி தடை விதித்துள்ளார்.
புதுவையில் நிவர் புயலால் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 30 செ.மீ. மழை பதிவானது. இதனைத் தொடர்ந்து வந்த புரெவி புயல் காரணமாகத் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக புதுவையெங்கும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் அனைத்தும் மழையால் சேதமடைந்தன.
அதே நேரத்தில், புதுவையில் பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர் ஏரி உள்பட 84 ஏரிகள் உள்ளன. கனமழையின் காரணமாக புதுசேரியில் 61 ஏரிகள் நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. ஊசுட்டேரி முழுக் கொள்ளளவான 3.50 மீட்டரையும், பாகூர் ஏரி முழுக் கொள்ளளவான 3.60 மீட்டரையும் எட்டியுள்ளது.
காட்டேரிக்குப்பம் ஏரி, சுத்துக்கேணி பெரிய ஏரி, தொண்டமாநத்தம் வெள்ளேரி, தொண்டமாநத்தம் கடப்பேரி, முருங்கப்பாக்கம் ஏரி, ஒழந்தை ஏரி, அபிஷேகப்பாக்கம் ஏரி, மணமேடு ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி, உச்சிமேடு ஏரி, மேல்பரிக்கல்பட்டு ஏரி, அரங்கனூர் ஏரி, கணகன் ஏரி, வேல்ராம்பட்டு ஏரி உள்ளிட்ட 61 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
ஆறு, குளங்களில் குளிக்கத் தடை
கனமழையால் ஆறுகள், ஏரிகள், படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன. இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் அணை நிரம்பியது. இதனைத் தொடர்ந்து, அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் புதுச்சேரியின் மணலிப்பட்டு வழியாக ஊசுட்டேரிக்கு வருகிறது. கைக்கிலப்பட்டு கிராமம் வழியாக ஊசுட்டேரி வாய்க்கால் நோக்கி வரும் வெள்ளத்தில் வழியில் உள்ள கிராம மக்கள் குளித்தும் மீன் பிடித்தும் வருகின்றனர்.
இதேபோல், கூனிமுடக்கு கிராமத்தில் நேற்று (டிச.9) வாய்க்காலில் குளித்த 8-ம் வகுப்பு படிக்கும் ஜீவா (14) என்ற சிறுவனைக் காணவில்லை. ஊசுட்டேரிக்குச் செல்லும் வாய்க்கால், மதகு மூடப்பட்டு தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் சிறுவனைத் தேடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஆறு, குளம், ஏரி, வாய்கால் போன்ற நீர்நிலைகளில் இறங்கவோ குளிக்கவோ யாரையும் அனுமதிக்கக் கூடாது என அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்த்வா இன்று (டிச.10) உத்தரவு பிறப்பித்துள்ளார்.