

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மட்டும் 16 ஆயிரத்து 921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.
இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் வரை அமரலாம். புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (டிச.10) டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சரவையில் மூத்த அதிகாரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீருங்கேரி மடத்தின் சார்பில் மதகுருக்கள் வந்திருந்து பூஜை நடத்தினர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளதற்காக உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது சுதந்திர இந்தியாவின் மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன்.
இத்திட்டத்தை வடிவமைப்பதில் உங்களின் தனிபட்ட தொடர்புக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன். இந்த விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.