சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் மக்கள் பாதிக்கப்படவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் மக்கள் பாதிக்கப்படவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
Updated on
2 min read

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தில் மக்கள் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது: தமிழ் திரையுலகில், நடிகர், தயாரிப்பாளர் உள்ளிட்ட எந்த சங்கமாக இருந்தாலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கம் தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருக்கிறது.

சங்கங்கள் தோற்றுவிப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனாலும், அவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் அரசின் கருத்து.

திமுகவுக்கு பாடம் புகுட்ட மக்கள் தயாராக உள்ளார். மு.க.ஸ்டாலின் அனைத்து வளர்ச்சி திட்டத்துக்கும் தடைக்கல்லாக உள்ளார். ஆட்சி பொறுப்பில் இருந்த நேரத்தில் அவர்கள் செய்யாததை நாங்கள் செய்யும் போது அதனை பாராட்ட வேண்டும்.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவசாயிகள் பாதிக்கப்படாத அளவுக்கு கையகப்படுத்தப்பட்டு நிலத்துக்கு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அந்த சாலைகளை உள்ளடக்கிய 5 மாவட்டங்களில் பலமுறை கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனை அரசியலாக்கி சிலர் தூண்டுகிறார்களே தவிர, அங்குள்ள மக்கள் பாதிக்கப்படவில்லை.

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை என்பது மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய அற்புதமான திட்டம். இதனால் போக்குவரத்து விரிவடையும், வணிக தொடர்பு அதிகரித்து தமிழகத்தின் வளர்ச்சிக்கான முதல் சாலையாக அமையும். வடமாநிலங்களை போல் தமிழகமும் முன்னேற வேண்டிய நேரத்தில் அதனை வரவேற்க வேண்டும். இங்கே தூண்டி விடுபவர்களை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.

அதிமுக ஆட்சியில் குற்றச்சாட்டு இருந்தால் தானே கனிமொழியால் கூறமுடியும். அவருக்கு தான் 2ஜி அலைக்கற்றை வழக்கில் மீண்டும் திகார் சிறைக்கு செல்ல வேண்டுமோ என்ற பயம். 10 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சி பொறுப்பில் உள்ளது. இதில், சட்டப்பேரவையில் அவர் பேசி உள்ளார். குற்றச்சாட்டுகள் யார் மீது வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதா என்றால் இதுவரை ஒரு குற்றச்சாட்டு கூட நிரூபிக்கப்படவில்லை.

அரசியலில் பழிவாங்கும் எண்ணத்துடன் நாங்கள் செயல்பட்டிருந்தால், திமுகவில் ஒரு தலைவர் கூட வெளியே இருந்திருக்க முடியாது. அத்தனை பேர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அவர்கள் பாணியில் சொல்வதாக இருந்தால், 2021-ம் ஆண்டு ஆட்சி வந்தால் அவர்கள் அனைவரும் சிறை செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்கு பயந்து தான் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை சிறைக்கு அனுப்புவோம் என கூறி வருகிறார். ஆனால், காலம் பதில் சொல்லும்.

அவர்கள் மண்டல வாரியாக வாரிசுகளை வைத்து ஆட்சி நடத்தினர். அந்தளவுக்கு இன்று அதிகார பகிர்வு இல்லை. முதல்வர் தலைமையில் ஒருமித்த ஆட்சி. அங்கே கனிமொழி, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, செல்வம் என அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு தமிழகத்தை பட்டா போட்டு விற்கத்தான் செய்யவில்லை.

அந்த நிலையை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையை மீண்டும் அனுபவிக்க மாட்டார்கள், என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in