

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா டிசம்பர் 21ம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா ஊரடங்கால் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்கள் அமைப்பினர், மற்றும் இந்து அமைப்பினர் சமூக இடைவெளியுடன் பாரம்பரிய முறைப்படி சுசீந்திரம் கோயில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட திருக்கோயில்ளின் இணை ஆணையர் அன்புமணி ஆகியோரிடம் தொடர் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவை சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.
தாணுமாலய சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய தேரோட்டம் நடத்துவதற்கும், கோயில் ரதவீதியில் பாரம்பரிய சுவாமி வாகன பவனிகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29ம் தேதி தேர் திருவிழா நடைபெறும். தேர்திருவிழா நடைபெறும் நாளில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படும்.
சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், மற்றும் இந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.