

பிரியாணி தயாரிக்க ஏற்ற, சீரக சம்பாவை ஒத்த புதிய ரக அரிசி விரைவில் சந்தைக்கு வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில், விஜிடி-1 நெல் ரகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ரகத்தைச் சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம் சார்பில், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் தலைமை வகித்துப் பேசியதாவது:
''இந்த ரகமானது ஏடிடி 43, சீரக சம்பா ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். 129 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஹெக்டேருக்கு 5,859 கிலோ விளைச்சல் தரக்கூடியது. அதிகபட்ச மகசூல் 9,500 கிலோ ஆகும். சீரக சம்பா ரகத்தைக் காட்டிலும் 32.56 சதவீதமும், டிகேஎம் ரகத்தைக் காட்டிலும் 13.80 சதவீதமும் அதிக விளைச்சல் தரக்கூடியது. இதன் நடுத்தர உயரம் 94 செ.மீ. ஆகும்.
அதிக தூர்கள், சாயாத தன்மை, சன்ன ரக வெள்ளை அரிசி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டது. நெல் மணி 8.9 கிராம் எடையுடன் இருக்கும். அரவைத் திறன் 66 சதவீதம், அரிசி காணும் திறன் 62.1 சதவீதம் கொண்டது.
சீரக சம்பா ரகத்தை ஒத்தது. சாதம் மிருதுவாகவும், வாசனையுடனும், உதிரியாகவும் இருக்கும். பிரியாணி தயாரிக்க மிகவும் ஏற்றது. இலைச்சுருட்டுப்புழு, குலைநோய், செம்புள்ளி நோய் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது''.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் எஸ்.கீதா, அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் செயல் இயக்குநர் வினோத்குமார் கவுல், வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் எஸ்.சுந்தரலிங்கம், விரிவாக்கக் கல்வி இயக்குநர் ஜவஹர்லால், ஆராய்ச்சி இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர்.
இதில் விவசாயிகள், நெல் வணிகர்கள், ஆலை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உணவக உரிமையாளர்கள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.