சாலையில் வைக்கப்படும் தடுப்புகளில் விளம்பரங்கள் அகற்றப்படுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சாலையில் வைக்கப்படும் தடுப்புகளில் விளம்பரங்கள் அகற்றப்படுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் தடுப்புகளில் விளம்பரங்கள் அகற்றப்படுவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன. 2019-ல் ஆண்டில் மட்டும் 57,228 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 10525 பேர் உயிரிழந்துள்ளனர், 67132 பேர் காயமடைந்துள்ளனர்.

தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு முன்புள்ள பொதுச் சாலை தடுப்புகளில் விளம்பரம் செய்யும் வகையில் பேரிகார்டுகள் வைக்கப்படுகின்றன.

அவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன.

எனவே, தமிழகத்தின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்கவும், கேரிகார்டு தடுப்புகளை அகற்றவும், பேரிகார்டுகள் அமைப்பது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன? சாலைகளில் உள்ள தடுப்புகளில் தனியார் விளம்பரங்கள் ஏன் வைக்கப்படுகின்றன?

வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? னெ கேள்வி எழுப்பினர்.

பின்னர், தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேக நிர்ணயம் மற்றும் பேரிகார்டுகளில் உள்ள விளம்பரங்களை அகற்றுவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in