பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

ஆம்னி பேருந்து கட்டண புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்; போக்குவரத்து ஆணையர் அலுவலகம் தகவல்

Published on

ஆம்னி பேருந்து கட்டண புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பேருந்துகளில் வாரத்தின் இறுதி மூன்று நாட்கள், பண்டிகை, விடுமுறை காலங்களில் தன்னிச்சையாகவே அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கின்றனர்.

தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் வெளிமாநில பதிவு எண்ணை கொண்ட பேருந்துகளாக இயங்கி வருகின்றன. மோட்டார் வாகன விதிகளை மீறி அந்த பேருந்துகளின் அடிப்பாகத்திலும், மேல் பகுதியிலும் அதிக பார்சல்களை ஏற்றி வருமானம் ஈட்டி வருகின்றனர். வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் பயணிக்கின்றனர்.

எனவே, விதிமீறும் ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயம்புத்தூர் 'கன்ஸ்யூமர் வாய்ஸ்' அமைப்பின் செயலர் என்.லோகு முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து போக்குவரத்து ஆணையர் அலுவலக உதவிச் செயலாளர் அனுப்பியுள்ள பதிலில், "ஆம்னி பேருந்துகளில் விழாக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், சரக்குப் போக்குவரத்து வாகனமாக மாற்றுதல் புகார்கள் தொடர்பாக அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தொடர் தணிக்கை செய்தும், இணக்க கட்டணம் வசூலித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆம்னி பேருந்து கட்டணம், அது தொடர்பாக வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in