

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90% வேலைவாய்ப்பு, தமிழக அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே என்ற அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என பண்ருட்டி வேல்முருகன் வழியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துவிட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது.
எனவே, தமிழக அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழக அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வே துறை, அஞ்சல் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி - சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற மத்திய அரசின் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் முதலியவற்றில், மத்திய அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வட மாநிலத்தவரையும் மற்ற வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்த்து வருகிறது.
தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் மத்திய அரசின் இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.
ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் அரசுத் துறை வேலைவாய்ப்பிலும், தனியார் வேலைவாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
மத்திய அரசு வேலைகள் பறிபோவது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம். பணிக்குத் தேர்வு பெற்ற 2 ஆண்டுகளில் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால், தமிழக அரசு அலுவலகங்களிலும் கடைநிலைப் பணியாளர் இடத்திற்குக் கூட பிற மாநிலத்தவர்கள் சேர வழி வகுத்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்துக் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவகத்தின் முன்பு போராட்டம், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி கோட்டையை முற்றுகையிட்டது எனப் பல்வேறு போராட்டங்களைக் குறிப்பிடலாம். ஆனாலும் தமிழக வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
எனவே, தமிழக அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழக அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
இவ்விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப் போக்கு காட்டும் பட்சத்தில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி மீண்டும் மாபெரும் போராட்டத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தமிழக அரசுக்கு நினைவுபடுத்துகிறேன்”.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.