

திருச்சியில் சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சி 8-வது வார்டுக்குட்பட்டது கீழ தேவதானம். சட்டப்பேரவையின் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட இந்தப் பகுதி, திருச்சி டவுன் ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ளது. இங்கு 250க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதை சாக்கடைத் திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் குண்டும் குழியுமாக மாறிவிட்டதாக இந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் ஏற்கெனவே புகார் கூறி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறிப் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டதாகப் புகார் கூறி வந்தனர்.
இந்தநிலையில், இந்தப் பகுதியில் வசிக்கும் 100க்கும் அதிகமான பெண்கள் உள்ளிட்ட குடியிருப்புவாசிகள் சேறும் சகதியுமாக இருந்த சாலையில் இன்று (டிச. 10) நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக குடியிருப்புவாசிகள் கூறும்போது, "சாலைகள் மிக மோசமாக உள்ளதால் நடந்துகூட செல்ல முடியவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறோம். இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றும் சாலையைச் சீரமைக்கவோ, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இன்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றனர்.
தகவலறிந்து மாநகராட்சி செயற்பொறியாளர் (நகரமைப்புத் திட்டம்) பி.சிவபாதம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறும்போது, "இந்தப் பகுதியில் சாலை சீரமைப்பு உட்பட ரூ.60 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். தற்போது தற்காலிகமாக சாலையைச் சீரமைக்கவும், தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
இதையடுத்து, குடியிருப்புவாசிகள் போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து சென்றனர்.