Published : 11 Oct 2015 02:14 PM
Last Updated : 11 Oct 2015 02:14 PM

நடிகை மனோரமா மறைவு: திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"ஆச்சி" என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட மனோரமா நேற்றிரவு மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக புகழ்க் கொம்பின் உச்சியிலே வீற்றிருந்த நேரத்திலும், என்பாலும், என் குடும்பத்தினர்பாலும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர்.

அண்ணா அவர்கள் எழுதிய “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்”, நான் எழுதிய “உதய சூரியன்”, “மணிமகுடம்”, தம்பி சொர்ணம் எழுதிய “விடை கொடு தாயே” போன்ற நாடகங்களில் “அல்லி” போன்ற சிறப்பான பாத்திரங்களை ஏற்று கழக மாநாடுகளில் எல்லாம் நடித்ததன் மூலம், திராவிட இயக்க நடிகையாகவே கருதப்பட்டவர் மனோரமா.

1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து “கின்னஸ்” உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது இவருக்குள்ள தனிப் பெருமை ஆகும். ஆச்சி மனோரமா நகைச்சுவை நடிகையாக, குணசித்திர நடிகையாக, பாடகியாக திரையுலகில் கடந்த ஐம்பதாண்டு காலமாக வாழ்ந்தவர். “பத்மஸ்ரீ” விருது, “புதிய பாதை” திரைப்படத்தின் மூலம் “சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது”, தமிழ்நாடு அரசின் “கலைமாமணி விருது” என பல விருதுகளை மனோரமா பெற்றுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கூட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விருக்கிறார் என்ற செய்தி வந்தது. அதற்குள் இன்று வந்த அவரது மறைவு திரைப்பட உலகிற்கு ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புத் தாயை இழந்து வாடும் தம்பி பூபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x