Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM

தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தியுடன் கட்சி தொடக்க விழா குறித்து ரஜினி ஆலோசனை

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு நேற்று வந்த ரஜினி. படம்: க.பரத்

சென்னை

புதிய கட்சியின் தொடக்க விழா குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

நீண்டகாலமாக தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை தள்ளிப்போட்டு வந்த நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப் போவதாக கடந்த 3-ம் தேதி அறிவித்தார். கட்சி தொடங்குவதற்கான தேதியை டிச.31-ம் தேதி வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமித்தார். ரஜினியின்அறிவிப்பை அவரது ரசிகர்கள்உற்சாகத்துடன் வரவேற்றனர். அன்றிலிருந்தே கட்சி தொடங்குவதற்கான பணிகள் வேகமெடுத்து வருவதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் பெங்களூரில் உள்ள தனது சகோதரரை ரஜினி சந்தித்து ஆசி பெற்றார்.

அங்கிருந்து சென்னை திரும்பிய ரஜினி, கோடம்பாக்கத்தில் உள்ளராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆகியோருடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், சென்னையைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மன்றத்தில் செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக ஒரு ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளரை நியமிப்பது, டிச.31-ம் தேதி கட்சி அறிவிப்பு தொடர்பான ஏற்பாடுகளை விரைவுபடுத்துவதுபற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக ரஜினி மக்கள் மன்றநிர்வாகிகள் தெரிவித்தனர்.

பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் தொடக்க விழா பொதுக்கூட்டத்தை எங்கு நடத்துவது, தேர்தல் நெருங்குவதால் கட்சி தொடங்கியதும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்குவது, பிரச்சாரத்தில் சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்துவது, கட்சியை பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

கட்சி தொடங்கும் தேதி உள்ளிட்ட விவரங்களை வரும் 31-ம்தேதி அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ள நிலையில், இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை ஒருநாள் விட்டு ஒருநாள்நடத்த ரஜினிகாந்த் திட்டமிட்டிருப்பதாகவும், கட்சியின் பெயர், தேர்ந்தெடுத்துள்ள கட்சியின் சின்னம், உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் கொள்கை, சட்டப்பேரவைத் தேர்தலில் எதையெல்லாம் முன்னிறுத்தி பிரச்சாரம் அமையும் என்பன உள்ளிட்ட அம்சங்களை வரும் 31-ம் தேதி ரஜினி அறிவிப்பார் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x