

எம்ஜிஆரை இரவல் வாங்குகிறார் கள் என்றால், அவர்கள் கட்சியில் தலைவர்களே இல்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது:
எம்ஜிஆர் ஆட்சி அமைக்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி வருகிறார். பாஜகவும் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துகிறதே?
எம்ஜிஆரின் ஆட்சி, கொள்கை, லட்சியம் ஆகியவற்றை சொல்லவும், கடைபிடிக்கவும் எங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.எம்ஜிஆரை இரவல் வாங்குகிறார்கள் என்றால், அவர்கள் கட்சியில் தலைவர்களே இல்லை என்றுதான் அர்த்தம்.
முதல்வரைதான் விவாதத்துக்கு அழைத்தேன் என்று திமுகவின் ஆ.ராசா கூறியுள்ளாரே?
2ஜி வழக்கை பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உலகமே எதிர்பார்த்து வருகிறது. தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவதுதான் நியதி. முதல்வர் தகுதி என்ன, ராசாவின் தகுதி என்ன? அவருடன் முதல்வர் வாதிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. வழக்கறிஞர் ஜோதி கேட்கும் கேள்விக்கு ராசா பதில் சொல்ல வேண்டியதுதானே.
ஜெயலலிதா இறப்பு தொடர்பான விசாரணை ஆணையத்திடம் விளக்கம் அளிக்காதது ஏன் என்று ராசா கேள்வி எழுப்பியுள்ளாரே?
உச்ச நீதிமன்ற தடை விலகியதும் விசாரணை நடந்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் உண்மை தெரிய வேண்டும் என்பதே அதிமுகவின் எண்ணம்.
எம்ஜிஆர் ஊழல் செய்ததாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியான செய்தி குறித்து?
எம்ஜிஆர் பல்கேரியாவில் எப்போது கப்பல் வாங்கினார்? ஆனால், திமுக மீது சர்க்கரை, சுடுகாடு என பல்வேறு ஊழல்கள் உள்ளன. கூவத்தை சுத்தப்படுத்துவதற்காக திட்டமிட்டு, முதலை வந்ததாக கூறி, அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான்.