

கோவை மாநகர காவல் நிர்வாகம் கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தியம் என 4 உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உட்கோட்டமும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுக்கு தலா ஒருவர் வீதம் 8 உதவி ஆணையர்கள் தலைமையில் இயங்குகிறது. கிழக்கு உட் கோட்டத்தில் சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி காவல் நிலையங்கள் உள்ளன. மாநகரில் கரோனா முழு ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்த குற்றச் சம்பவங்கள், கடந்த சில மாதங்களாக அதிகரித்துவருகின்றன. குறிப்பாக, கிழக்கு உட்கோட்டத்தில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்கின்றன.
கடந்த மாதம் 27-ம் தேதி விமான நிலையம் அருகே, செல்போனுக்காக விக்னேஷ்(24) என்ற இளைஞர் வழிப்பறி கொள்ளையர்களால் குத்திக் கொல்லப்பட்டார். 25-ம் தேதி கணபதி அருகே பேச்சியம்மாள்(63) என்பவரிடம் 10 பவுன் நகை, பீளமேடு அருகே பரிமளா(53) என்பவரிடம் 5 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். கடந்த வாரம் பீளமேட்டில் சதீஷ்குமார்(51) என்ற மென்பொருள் நிறுவன உரிமையாளரின் வீட்டுபூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.2.50 லட்சம் தொகையை திருடிச் சென்றனர். கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சரவணம்பட்டியில் துரைசாமி என்பவரின் வீட்டில் ரூ.30 லட்சம் திருட்டு போனது.
கடந்த 8-ம் தேதி சின்னவேடம்பட்டி அருகேயுள்ள லட்சுமிநகரில் சரவணன்(41) என்பவரின் வீட்டில் 25 பவுன் நகை, ரூ.42 ஆயிரம் ரொக்கம், அதற்கு அருகேயுள்ள விஜயகுமார்(51) வீட்டில் 9 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் தொகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். நடப்பாண்டில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 292 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருட்டு, கொள்ளை போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.2.63 கோடி ஆகும். இதில் 231 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மற்ற வழக்குகளில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புறச் சாலைகளிலும் காவல்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும். சிறையில் இருந்து வெளியே வரும் பழைய குற்றவாளிளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.கடைகளை மூடிய பின்னர், கள்ளச்சந்தையில் மதுவிற்பதை தடுக்க வேண்டும்.ரோந்துப்பணியை முறையாக மேற்கொள்ளாத காவலர்கள் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் - பொதுமக்கள் நட்புறவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.
30 பேர் கூடுதலாக நியமனம்
மாநகர காவல் துறையின் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் (குற்றப்பிரிவு பொறுப்பு) ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ இளைஞர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மற்ற வழக்குகளில் தொடர்புடைய வர்கள் விரைவில் கைது செய்யப் படுவர். கிழக்கு உட்கோட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க தலா 10 காவலர்கள் என 3 காவல் நிலையங்களுக்கும் மொத்தம் 30 காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பகல், இரவு சுழற்சி முறையில் ரோந்து மேற்கொள்வர் ’’ என்றார்.