மதுரவாயல் – வாலாஜாபேட்டை இடையிலான சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவு

மதுரவாயல் – வாலாஜாபேட்டை இடையிலான சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை குண்டும், குழியுமாக இருப்பது தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சாலையில் உள்ள குழிகள் அனைத்தும் 10 நாட்களில் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கும் சாலைகள் உலகத் தரத்துக்கு இணையாக இருப்பது இல்லை என்றும், மதுரவாயல் – வாலாஜா பேட்டைசாலை கடந்த 2 ஆண்டுகளாக முறையாக சீரமைக்கப்படாமல் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது” என அதிருப்தி தெரிவித்தனர்.

இதனால் சென்னை – பெங்களூரு சாலையில் மட்டும் ஆண்டுக்கு 500-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடப்பதாகவும், மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு இழப்பீடு கோரும் போது இனி பாதிக்கப்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் துறை போன்றவற்றையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும், என அறிவுறுத்தினர்.

பின்னர் மதுரவாயல் வாலாஜாபேட்டை சாலையை பழுதுபார்க்கும் வரை 2 வார காலத்துக்கு அந்த சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதேபோல நொளம்பூரில் நெடுஞ்சாலை ஓரமாக மூடப்படாதமழைநீர் வடிகாலில் விழுந்து தாய்,மகள் இறந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள், பலியான தாய், மகளுக்கு தமிழகமுதல்வர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதுபோல, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையமும் இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.21-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in