

பிருக்ளி மேடு பகுதியில் மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட பகுதிகளை கல்வித் துறைஅமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பக்கிங்ஹாம் கால்வாயின் இணைப்பு கால்வாயால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்வதால், கால்வாயை தூர்வாரி பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த ஐந்துகாணியில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட இருளர் பகுதியை கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், புதுப்பட்டினத்தை அடுத்த பிருக்ளி மேடு என்ற பகுதியில் அமைந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் இணைப்பு கால்வாயை பார்வையிட்டனர். அப்போது, ஆர்எம்ஐ நகர், இந்திரா குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இணைப்பு கால்வாய் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைக் காலங்களில் கால்வாயில் வரும் தண்ணீர் பெருவெள்ளமாக அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துகொள்வதால், பெரிதும் பாதிப்பு ஏற்படுவதாக முறையிட்டனர்.
மேலும், மேற்கண்ட இணைப்பு கால்வாயை தூர்வாரி இருபுறங்களிலும் பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் எனகோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து,கால்வாயில் 300 மீட்டர் நீளத்துக்கு பக்கவாட்டு சுவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். பின்னர், வாயலூர் தடுப்பணையை பார்வையிட்டு கடலுக்கு செல்லும் நீரின் அளவு மற்றும் தடுப்பணையை உயர்த்துவது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் பர்வதம், அதிமுக மாவட்டச்செயலர் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ தனபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கிங் உசேன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். முன்னதாக திருப்போரூர் ஒன்றியம் பஞ்சம் திருத்தி கிராமத்தில் குடிசை வீடுகளை இழந்த இருளர் மக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.